அரசு அறிமுகப்படுத்த விரும்பிய, சர்ச்சைக்குரிய, “தவறான தகவல்” சட்ட மாற்றத்தை திரும்பப் பெற்றுள்ளது.
தகவல் தொடர்பு சட்டத் திருத்தம் (தவறான தகவல் மற்றும் பிழையான தகவல்களை எதிர்த்துப் போராடுதல்) என்ற சட்ட முன் வரைவு கடந்த மாதம் (2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் அதே மாதத்தின் பிற்பகுதியில் அது திரும்பப் பெறப்பட்டது.
“செனட்டர்கள் வெளியிட்ட பொது அறிக்கைகள், மற்றும் செனட்டர்களுடன் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின் அடிப்படையில், இந்த சட்ட முன் வரைவு செனட் சபையில் நிறைவேற்றப்படுவதற்கான எந்த சாத்தியமும் இல்லை என்பது தெளிவாகிறது” என்று தகவல் தொடர்பு அமைச்சர் மிஷேல் ரோலண்ட் (Michelle Rowland) கூறினார்.
“மிகவும் தீவிரமான, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் டிஜிட்டல் தளங்களில் பகிரப்படுவதை எதிர்த்துப் போராடுவதில் இந்த சட்ட முன் வரைவு கவனம் செலுத்தியது, அத்துடன் பேச்சு சுதந்திரத்தைப் பலப்படுத்த பல பாதுகாப்பு கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது” என்று அவர் கூறினார்.
ஆனால், இந்த சட்ட முன் வரைவு கருத்து சுதந்திரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று பல செனட்டர்கள் கவலைகளை எழுப்பினர்.
ஆஸ்திரேலியர்களுக்கு தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது பிழையான தகவல்களை எளிதில் பரப்பும், குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் பரப்பப்படுவது குறித்த கவலைகளை அரசு முதலில் தெரிவித்தது.
தவறான தகவல் மற்றும் பிழையான தகவல்கள் ஏற்படுத்தும் அபாயத்திற்குப் பதிலளிக்கவும் அதை நிர்வகிக்கவும் டிஜிட்டல் தகவல் தொடர்பு தள நிறுவனங்கள் பொறுப்பேற்கும் அதிகாரத்தை வழங்குவதற்கு இந்த சட்ட முன் வரைவு முயன்றது.
இந்த சட்ட முன் வரைவு திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில், “எந்த ஒரு நடவடிக்கையும் சரியான தீர்வு அல்ல” என்று அமைச்சர் மிஷேல் ரோலண்ட் ஒப்புக்கொண்டார்.
“டிஜிட்டல் இயங்கு தளங்கள் மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவதை உறுதிசெய்ய பாதுகாப்பு கட்டமைப்புகளை நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.
'ஒரு சிறந்த சமநிலை'
தவறான தகவல்களும் பிழையான தகவல்களும் உலகின் மிகப்பெரிய ஆபத்தாக இப்போது மாறியுள்ளது என்று உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum - WEF) கூறுகிறது.
அதனால் வரும் அபாயங்களை எதிர்த்துப் போராடுவதற்கான விதிமுறைகளை உலகெங்கிலும் உள்ள அரசுகள் செயல் படுத்துகின்றன.
ஆனால், செயல்திறன் மற்றும் ஒழுங்கு முறை உருவாக்கப்படும் வேகம், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடாக வாய்ப்பில்லை என்று WEF குறிப்பிடுகிறது.
ஒழுங்குமுறை சரியான சமநிலையை அடைய வேண்டும் என்று SBS Examinesஉடன் பேசிய மனித உரிமைகள் ஆணையர் லோரெய்ன் ஃபின்லே (Lorraine Finlay) கூறினார்.
“பேச்சு சுதந்திரம், மற்றும் ஆன்லைன் பாதுகாப்பிற்கு இடையே ஒரு சிறந்த சமநிலையைக் கண்டறிவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும், ஏனென்றால் ஆன்லைன் தளங்கள் பாதுகாப்பான இடங்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும், மேலும் அவ்வாறு செய்வதனால் பேச்சு சுதந்திரத்தை தேவையில்லாமல் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை," என்று அவர் கூறினார்.
“ஜனநாயக உயிர்ச் சக்தியைப் பாதுகாப்பது, நாம் செய்ய வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்று. வெவ்வேறு கருத்துக்கள், வெவ்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் வெவ்வேறு பார்வைகளை வரவேற்று, மிகவும் நாகரீகமான வகையில் ஆக்கபூர்வமான வழியில் நாம் ஈடுபட முடியும்.”
“ஆஸ்திரேலியாவில், பாதுகாப்பான ஆன்லைன் தளங்களை உருவாக்குவதற்கும் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலையைக் கண்டறிய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
தவறான தகவல்களை அரசுகள் வேறு எப்படி சமாளிக்க முடியும்?
தவறான தகவல்கள் உருவாக்கும் சிக்கலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு படி முறையை மெல்பன் பல்கலைக்கழகத்தின் ‘Melbourne Centre for Cities’ என்ற மையத்தின் ஆராய்ச்சியாளர் இக்கா ட்ரிஜ்ஸ்பர்க் (Ika Trijsburg) உருவாக்கியுள்ளார்.
“இது உள்ளூர் மட்டத்திலிருந்து வெளிப்படுகிறது,” என்று அவர் SBS Examineற்குக் கூறினார்.
“உள்ளூர் அரச கட்டமைப்புகள் அரசின் மிகவும் நம்பகமான நிலை என்பது மட்டுமல்லாமல் மக்களால் இலகுவில் அணுகக்கூடியவை ... அவை சுறுசுறுப்பாக இயங்குபவை, உள் நாட்டில் உட்பொதிக்கப்பட்டவை, ஒத்துழைப்பதில் சிறந்தவை மற்றும் மிகவும் சிக்கலான சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அதிக பொறுப்பை ஏற்பவை” என்று இக்கா ட்ரிஜ்ஸ்பர்க் கூறினார்.
அவரது படிமுறை மூன்று-கட்ட உத்தியை வழங்குகிறது: முன்கூட்டியே கண்டறிதல், பரவலைத் தடுத்தல் மற்றும் நீக்குதல் மற்றும் மீட்பு.
பிரிவினை அதிகமாக உள்ள ஒரு இடத்தில் தவறான தகவல் செழித்து வாழும் என்று இக்கா ட்ரிஜ்ஸ்பர்க் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழு கண்டறிந்தனர். எனவே, அதனைக் கட்டுப்படுத்த ஒரு பாரபட்சமற்ற அணுகுமுறை அவசியம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அரசியல் தலையிடும் போது என்ன நடக்கும்?
“சட்டம் ஒருவரின் தனியுரிமை மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை மட்டுப்படுத்தலாம்” என்ற எச்சரிக்கை, இந்த சட்ட முன்வரைவின் குறிப்பில் ‘மனித உரிமைகள் மீதான தாக்கங்கள்' என்ற துணைத் தலைப்பின் கீழ் கூறப்பட்டிருந்தது.
அவ்வாறு செய்ய சட்டமியற்றப்பட்டால், இணையத் தளங்களை மற்றும் சமூக ஊடகங்களை இயக்குபவர்கள் அவற்றில் பதியப்படுபவை குறித்து நடவடிக்கை எடுக்கும் போது, “அதிக எச்சரிக்கையுடன்” இருக்கலாம் என்று ஆவணம் கூறியது.
“அவை பாரிய விளைவை ஏற்படுத்தக்கூடும், பேச்சு சுதந்திரத்தை இது கட்டுப்படுத்தக் கூடும்” என்று அந்த ஆவணம் கூறுகிறது.
வேறு வழிகள் ஏதாவது இருக்கிறதா?
தவறான தகவல் மற்றும் பிழையான தகவல்களை ஒழுங்கு படுத்தும் பொறுப்பு அரசிடம் கையளிக்கப்படக்கூடாது என்று சிலர் கூறுகிறார்கள்.
இந்த சுமையை தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது சுமத்த வேண்டும் என்று பேச்சு சுதந்திரத்திற்காகப் போராடுபவரான Josh Szeps, SBS Examinesஇடம் கூறினார்.
அவர்கள் அதிக வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
“வெளிப்படைத்தன்மையை வளர்ப்பதற்கு சமூக ஊடக நிறுவனங்கள் என்ன செய்கின்றன, அவை பயன்படுத்தும் செயல்முறைகள் எப்படியான உள்ளடக்கத்தை நோக்கி எம்மைத் தூண்டுகின்றன, மேலும் அது பரப்பும் கருத்துகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றிய ஆராய்ச்சிக்கான அணுகலைக் கோருவது பற்றி நான் முனைப்புடன் இருப்பேன்” என்று Josh Szeps கூறினார்.
"ஒவ்வொருவரும் அவரவர் தனிப்பட்ட முறையில் தொகுக்கப்பட்ட உலகின் ஊட்டத்தைப் பார்க்கும் போது ஒரு நாகரீகத்தை எவ்வாறு ஒன்றாக இணைப்பது என்ற பரந்த கலாச்சார சிக்கலை விட, இது ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பது எளிதான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
Editor's note: This article was updated on December 3 2024, to clarify reasons for the bill's withdrawal.